அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் புழல் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறைத்துறை நிர்வாகத்தின் கீழ் செந்தில் பாலாஜி கொண்டுவரப்பட்டுள்ளதால், அவரை சந்திக்க குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் புழல் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பிறகு சேகர்பாபு கூறுகையில், நீதிமன்ற காவலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. குடும்பத்தினரை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. உடனடியாக செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தி உள்ளோம். அவரது உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். இவ்வாறு சேகர்பாபு கூறினார்
சற்றுமுன் செந்தில்பாலாஜியை பார்க்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி அளிக்கப்படாததால், மருத்துவர்களிடம் உடல்நலன் குறித்து விசாரித்து சென்றார்.