தர்மபுரி அருகே காதலை கை விட்டதால் ஆத்திரமடைந்த 17வயது சிறுவன், இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து, பாறை இடுக்கில் வீசிச்சென்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி பழைய ரயில்வே லைனை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்சா (23). பிபார்ம் படித்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன் ஓசூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, கடத்தூரான் கொட்டாய் அருகே, நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்கில், ஹர்சா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து அதியமான்கோட்டை போலீசார் சென்று, 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஹர்சாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: தர்மபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கல்லூரி ஒன்றில் படித்து வருகிறான். கடந்த ஓராண்டாக ஹர்சாவுடன் பழகி வந்துள்ளான். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஹர்சாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு, ஓசூரில் வேலை செய்யும் இடத்தில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சிறுவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவன், நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து ஓசூரிலிருந்து தர்மபுரி வந்த ஹர்சாவிடம் பேசிய சிறுவன், கடைசியாக கோம்பை வனப்பகுதி பாறை பகுதிக்கு ஒருமுறை மட்டும் வா என்று அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் ஹர்சா, நாம் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்னை வரும். நான் விரும்பும் நபர், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எந்த பிரச்னையும் வராது. எனவே, என்னை மறந்து விடு என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சிறுவன், ஹர்சாவின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து பாறை இடுக்கில் போட்டுவிட்டு தப்பியுள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்தனர்.