அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா✍️சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது.

உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம் என அமெரிக்க ராணுவம் கூறியது.

அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிபர் பைடன், கடந்த புதன்கிழமை பலூன் (சீனாவின் கண்காணிப்பு பலூன்) பற்றி என்னிடம் விவரங்களை கூறினார்கள். அதனை முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி பென்டகனுக்கு (ராணுவ தலைமையகம் அமைந்த) உத்தரவிட்டேன்.

அவர்கள் அதனை சுட்டு வீழ்த்தி விட்டனர். நிலப்பகுதியில் வசிக்கும் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.

எங்கள் நாட்டில் இருந்து 12 மைல் எல்லைக்குள், நீரின் மேற்பரப்பில் வந்தபோது, சிறந்த தருணத்தில் அதனை வீழ்த்த முடிவு செய்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அதற்காக, இதனை செய்து முடித்த விமானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

இதற்கு முன், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டது.

இதுபற்றி சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட விண் ஓடம் ஆகும். வானிலை ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், திசைமாறி அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்து உள்ளது.

இதற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்தது.

கனடா நாட்டு தேசிய பாதுகாப்பு துறையும், அமெரிக்காவுடன் இணைந்து, சந்தேகத்திற்குரிய சீனாவின் உளவு பலூனின் இயக்கம் பற்றி கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக, அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டு உள்ளது. அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் பறந்திருப்பது, அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என தெளிவாக தெரிகிறது என பிளிங்கன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள விளக்க அறிக்கையில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து வந்த ஆகாய கப்பல் வகையை சேர்ந்த விமானம். ஆராய்ச்சி பணியில், குறிப்பிடும்படியாக வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபட கூடிய நோக்கத்திற்கானது.

மேற்கத்திய காற்று பாதிப்பால் மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையாலும், திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது என தெரிவித்து உள்ளது.

அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், பென்டகனின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறும்போது, அந்த பலூன் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க கண்ட பகுதியின் மையத்தின் மேல் செல்கிறது. அது மக்களுக்கு ராணுவ அல்லது உடலியல் சார்ந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்பது பற்றி இந்த நேரத்தில் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து அதனை கண்காணித்து முடிவுகளை பற்றி ஆய்வு செய்வோம் என கூறியுள்ளார்.

சீனா அளித்துள்ள விளக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீன அரசின் விளக்கம் பற்றி நன்றாக எங்களுக்கு தெரியும். ஆனால், உண்மை என்னவெனில் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும்.

அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. அது ஏற்று கொள்ளப்பட முடியாதது. இதனை நாங்கள் சீன அரசிடம் நேரடியாகவே, தூதரக அளவில் உள்பட பல்வேறு மட்டங்களில் தெரிவித்து விட்டோம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா அணுசக்தி தளம் அமைந்த மொன்டானா அருகே வானில் வெடிவிபத்து ஏற்பட்ட வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, மற்றொரு சீன உளவு பலூன் பறந்து வருகிறது என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இதனால் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி பேட் ரைடர் சி.என்.என்.னுக்கு அளித்த பேட்டியில், லத்தீன் அமெரிக்கா மீது மற்றொரு சீன உளவு பலூன் பறந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளன.

இது சீனாவின் மற்றொரு உளவு பலூனா? என நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இதுபற்றி மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறும்போது, லத்தீன் அமெரிக்காவின் எந்த பகுதி மீது சரியாக அது பறந்து செல்கிறது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. ஆனால், அது தற்போது அமெரிக்காவை நோக்கி வரவில்லை என்பது போன்று தெரிகிறது என கூறியுள்ளார்.

இந்த நிலையில், மொன்டானாவின் பில்லிங்ஸ் பகுதி மீது குண்டுவெடிப்பு நடந்தது போன்ற வீடியோ ஒன்றும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

அதில், வெள்ளை நிறத்தில் தொடர்ச்சியாக வானில் புகை பரவியபடி காணப்படுகிறது. ஏதோ ஒரு பொருள் வெடித்து பூமியில் வீழ்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஆனால், உளவு பலூன் விவகாரத்தில் எங்கள் பெயரை கெடுக்க அமெரிக்க ஊடகங்களும், அரசியல்வாதிகளும் முயற்சிக்கின்றனர் என சீனா குற்றச்சாட்டு கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும்போது, எந்தவொரு நாட்டின் இறையாண்மையையும் மீறும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. அதேபோன்று, எந்தவொரு நாட்டின் எல்லைக்குள்ளோ அல்லது வான்வெளிக்குள்ளோ நாங்கள் அத்துமீறி நுழைந்ததில்லை.

அமெரிக்காவில் உள்ள சில அரசியால்வாதிகள் மற்றும் ஊடகங்கள் இதனை பெரிதுப்படுத்துகின்றன. சீனாவை தாக்கும் வகையிலும், நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும் செயல்படுகின்றன. இதற்கு சீனா கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவிக்கின்றது என கூறியுள்ளார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *