ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வரும் 7-ந்தேதி தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதை முன்னிட்டு ,அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் படிவங்கள் ஆன்லைன் மூலம் இன்று இரவு தாக்கல்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

சென்னை:அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருவருமே வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கினார்கள்.ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. இதில் ஓ.பி.எஸ். அணியினரும் பங்கேற்கவும் அறிவுறுத்தியது.இதையடுத்து இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அ.தி.மு.க. பொதுக்குழு முடிவில் தற்போது 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,662 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள சுமார் 148 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.இப்படி இருதரப்பை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி அ.தி.மு.க. தலைமை கழகம் மூலமாக விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் கொண்டு சேர்க்கப்பட்டது.இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்சை இணைத்து இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு அ.தி.மு.க. தலைமைக்கு நேற்று முதல் வழங்கி வருகிறார்கள்.பெரும்பாலான உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இன்று காலையிலும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை சந்தித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு படிவத்தை வழங்கினார்கள்.வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை கட்சி நிர்வாகிகள் சிலர் மொத்தமாக வாங்கி வந்தும் கொடுத்தனர். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதால் அவரது அணியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களும் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுதொடர்பாக ஓ.பி.எஸ். இன்று தனது அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தென்னரசு வேட்பாளராக களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.இன்று இரவு 7 மணிக்குள் ஆதரவு ஒப்புதல் படிவங்களை பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.தென்னரசுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. அதேநேரத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரிலும் இந்த படிவங்களை வழங்குகிறார்.அவருடன் சி.வி.சண்முகம் எம்.பி., அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோரும் செல்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.நாளை மறுநாள் (7-ந்தேதி) தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு அன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *