கோவில்பட்டியில் பிளஸ்2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை✍️சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரனை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

கோவில்பட்டியில் பிளஸ்2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லக்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 60). இவர் கோவில்பட்டி முத்துநகரில் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சண்முகசுந்தரி (55).

இவர்களுக்கு சுப்பிரமணியன் (27), ஸ்ரீ பாலாஜி (17) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சுப்பிரமணியன் எம்.பி.ஏ. படித்து விட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். ஸ்ரீ பாலாஜி, கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளிக்கு புறப்பட்டபோது…

நேற்று காலையில் வழக்கம்போல் சங்கர நாராயணன் முத்துநகரில் உள்ள தனது தொடக்கப்பள்ளிக்கு சென்றார். பின்னர் ஸ்ரீபாலாஜி தாயார் சண்முகசுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு தங்களது பள்ளிக்கூடத்துக்கு சென்று இறக்கி விட்டார்.

பின்னர் ஸ்ரீபாலாஜி தான் படிக்கும் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால், அவர் அங்கு செல்லாமல் தனது வீட்டுக்கு சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே, சங்கர நாராயணன் பள்ளிக்கூட வேனில் மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள வழியாக சென்றார். அப்போது அங்கு ஸ்ரீபாலாஜியின் மோட்டார் சைக்கிள் நின்றதால், வேனை நிறுத்தி விட்டு தனது வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்தார்.

அப்போது வீட்டில் ஸ்ரீ பாலாஜி சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீபாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீபாலாஜி இறந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவர் ஸ்ரீபாலாஜி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் ஸ்ரீபாலாஜி வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர் ஆவார். அவரது உடலைப் பார்த்து பெற்றோர்கள், சக மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மாணவர் தற்கொலையால், அவர் பயின்ற பள்ளிக்கூடத்துக்கும், அவரது தந்தைக்கு சொந்தமான பள்ளிக்கூடத்துக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *