வண்டலூர் உயிரியல்பூங்காவில்,வாயில் ரத்தம் சொட்டு, சொட்டாக,வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்✍️என்ன நடக்கிறது வண்டலூரில்? அதிர்ச்சி ரிப்போர்ட்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

விண்மீண்தீ நியூஸ்:

வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து பத்து நெருப்புக் கோழிகள் உயிரிழந்த சம்பவம், சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

“நெருப்புக் கோழிகளுக்கு பொதுவாகவே நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். அவற்றை அவ்வளவு எளிதில் நோய்கள் தாக்குவதில்லை. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன,” என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

என்ன நடக்கிறது வண்டலூரில்?

சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு 180 வகையான இனங்களில் 2,400-க்கும் மேற்பட்ட உயிரினங்களை பராமரித்து வருகின்றனர். கொரோனா பேரிடர் காரணமாக இடையில் மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்கா, பின்னர் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று காரணமாக நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கா நிர்வாகம், சிங்கங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வந்தாலும் கடந்த ஜூன் 16 ஆம் தேதி ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. இந்த சிங்கங்களின் உடல் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு (NIHSAD) அனுப்பி வைக்கப்பட்டது. அதன் ஆய்வு முடிவில் உயிரிழந்த சிங்கத்துக்கு கோவிட் தொற்று தாக்கப்பட்டது தெரியவந்தது.

தற்போது விலங்குகளை பாதித்த கோவிட் துயரத்தில் இருந்து பூங்கா நிர்வாகம் மீண்டு வந்தாலும், நெருப்புக் கோழிகளின் தொடர் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்த 36 நெருப்புக் கோழிகளில் கடந்த 27 ஆம் தேதி ஒரு நெருப்புக் கோழி சுருண்டு விழுந்து இறந்துள்ளது. மறுநாளும் மற்றொரு நெருப்புக் கோழி விழுந்து இறந்தது. தொடர்ந்து ஒரேநாளில் ஆறு நெருப்புக் கோழிகள் வாயில் ரத்தம் வடிந்து இறந்துவிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரையில் பத்து நெருப்புக் கோழிகள் வரையில் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். ஒரேநேரத்தில் தொடர்ந்து மரணமடைவதற்கான காரணம் என்ன என்பதை அறிய போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்துக்கு நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

“பறவைக் காய்ச்சல் காரணமாக நெருப்புக் கோழிகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறதே?” என மூத்த கால்நடை மருத்துவரும் டெல்லி உயிரியல் பூங்காவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவருமான பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

“பறவைக் காய்ச்சலால் இறப்பு ஏற்படவில்லை என உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. நெருப்புக் கோழிகளை பாதிக்கும் ரானிகட் நோயாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்கின்றனர். வண்டலூரில் ஏராளமான பறவைகள் உள்ளன. பறவைக் காய்ச்சலால் நெருப்புக் கோழி பாதிக்கப்பட்டிருந்தால், மற்ற பறவைகளுக்கும் அந்நோய் வந்திருக்க வேண்டும். அப்படி எந்தத் தகவலும் இல்லை” என்கிறார்.

மேலும், “ தற்போது வரையில் 10 நெருப்புக் கோழிகள் இறந்துள்ளன. இது மிகப் பெரிய எண்ணிக்கைதான். பூங்காவில் உள்ள மற்ற பறவைகளுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள நெருப்புக் கோழிகளுக்கு மட்டும் நோய் தாக்குகிறது என்றால், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஏதோ பிரச்னை உள்ளதென்று பொருள். நெருப்புக் கோழிகளின் இருப்பிடத்தில் உள்ள மணலை மாற்றாமலும் கழிவுகள் தேங்கியிருந்தாலும் இப்படி மரணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.

“ சென்னையில் உள்ள காட்டுப்பாக்கத்தில் நெருப்புக் கோழிகளை உற்பத்தி செய்து எல்லா உயிரியல் பூங்காக்களுக்கும் கொடுக்கின்றனர். அங்கு என்ன மாதிரியான பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைக் கவனித்தால் வண்டலூர் பூங்கா நிர்வாகம் செய்யத் தவறியது என்ன என்பது தெரியவரும். ஏனென்றால், காட்டுப்பாக்கத்தில் 50 நெருப்புக் கோழிகள் உள்ளன. அங்கு அவற்றுக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. அப்படியிருக்கும்போது வண்டலூரில் ஏன் இந்தளவுக்கு இறப்பு ஏற்பட்டது என ஆராய வேண்டும்.

பொதுவாகவே நெருப்புக் கோழிகள் என்பவை நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பவை. அவற்றை அவ்வளவு எளிதாக நோய்கள் தாக்குவதில்லை. அவற்றுக்கு காய்கறிகள், கீரை, முட்டை போன்றவற்றை உணவாகக் கொடுக்கின்றனர். கோழி காலரா உள்பட எதாவது ஒன்று இல்லாவிட்டால் மரணம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. போபாலில் இருந்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் காரணத்தை அறிய முடியும்” என்கிறார், மருத்துவர் பன்னீர்செல்வம்.

நெருப்புக் கோழிகளின் மரணம் தொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியர் பூங்கா துணை இயக்குநர் காஞ்சனா வெளியிட்டுள்ள தகவலில், “ கடந்த 27,

28, 29 ஆகிய தேதிகளில் நோய்வாய்ப்பட்ட 8 நெருப்புக் கோழிகள் இறந்தன. அவ்வாறு இறந்த நெருப்புக் கோழிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவற்றில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் நச்சுத் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மற்ற தீக்கோழிகளும் பூங்கா கால்நடை மருத்துவர்களால் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றன. தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும் மேலும் 2 நெருப்புக் கோழிகள் கடந்த 3.11.2021 அன்று இறந்தன” என்கிறார்.

“ நெருப்புக் கோழி பறவைகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க 10 பேர் அடங்கிய நிபுணர் குழுவினர் உள்ளனர். இந்த நிபுணர் குழுவின் ஆய்வில் முந்தைய இறப்பு மற்றும் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் தீவிர நச்சுத்தன்மை (பூஞ்சை நச்சுக்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள்), நீர் நச்சுத்தன்மை (நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள்) நெருப்புக் கோழிகளுக்கு பொதுவான பாக்டீரியா நோய்கள் (கோழி காலரா மற்றும் ஆந்த்ராக்ஸ்) வைரஸால் ஏற்படும் ரானிகட் நோய்/நியூ கேஸ்டில் நோய் போன்றவற்றால் இறப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். கால்நடை மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் நெருப்புக் கோழிகள் உள்ளன. நெருப்புக் கோழிகளின் இருப்பிடங்களில் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன” என்கிறார் காஞ்சனா.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *