ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் ‘மெடா’ என மாற்றம்✍️இது குறித்து பேஸ்புக் நிறுவணர், மார்க் சொல்வதென்ன?✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் ‘மெடா’ என மாற்றம்: இது குறித்து மார்க் சொல்வதென்ன?

ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய பிராண்டிங் முயற்சியின் ஒரு பகுதியாக, தன் கார்ப்பரேட் நிறுவன பெயரை ‘மெடா’ என மாற்றியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் செய்யும் பணிகளை இந்த புதுப்பெயர் உள்ளடக்குவதாக இருக்கும் என நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சமூக வலைதளம் என்பதைத் தாண்டி, மெய்நிகர் சேவைகளை எல்லாம் மேம்படுத்தி வருகிறது.

இந்த பெயர் மாற்றம், தன் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சேவைகளுக்கு பொருந்தாது, அச்சேவைகளைக் கட்டுப்படுத்தும் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு மட்டுமே இந்த பெயர் மாற்றம் பொருந்தும்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்ட, ஆவணங்களின் அடிப்படையில், ஃபேஸ்புக் தொடர்பாக பல்வேறு எதிர்மறை செய்திகள் வந்ததைத் தொடர்ந்து இப்பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பை விட லாபத்துக்கு முன்னுரிமை கொடுத்தது என ஃப்ரான்செஸ் ஹாகென் என்கிற முன்னாள் ஊழியர் குற்றம்சாட்டினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் தாய் நிறுவனத்தின் பெயரை ‘ஆல்ஃபபெட்’ என மாற்றியது. ஆனால் அப்பெயர் அதிகம் பிரபலமாகவில்லை.

ஒரு ஹெட்செட்டைப் பயன்படுத்தி விளையாட, வேலை செய்ய, ஒருவரோடு ஒருவர் மெய்நிகராக தொடர்பு கொள்ள ‘மெடாவெர்ஸ்’ என்கிற இணைய உலகத்தைக் கட்டமைப்பது தொடர்பான திட்டங்களை வெளியிட்ட போது, ‘மெடா’ என்கிற பெயரையும் அறிவித்தார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்.

இன்று நாம் (ஃபேஸ்புக்) செய்யும் அனைத்து வேலைகளையும் இப்போதிருக்கும் பிராண்ட் பெயரால் முழுமையாக பிரதிபலிக்க சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

“காலப்போக்கில் நாம் மெடாவெர்ஸ் நிறுவனமாக பார்க்கப்படுவோமென நம்புகிறேன். நம் பணிகள் மற்றும் அடையாளத்தை, நாம் கட்டமைப்பதை நோக்கி நிலை நிறுத்த விரும்புகிறேன்” என ஒரு மெய்நிகர் மாநாட்டில் கூறினார்.

“இப்போது எங்கள் வியாபாரத்தை இரு பிரிவுகளாக பார்க்கிறோம் மற்றும் குறிப்பிடுகிறோம். ஒன்று எங்கள் செயலிகளின் குடும்பம் மற்றொன்று எதிர்கால தலங்கள் குறித்த பணிகள்.

“இதன் ஒரு பகுதியாக, நாம் செய்யும் எல்லா பணிகளையும் பிரதிபலிக்கும் விதத்திலும், நாம் யார் என்பதை பிரதிபலிக்கும் விதத்திலும், நாம் கட்டமைக்க இருப்பதையும் பிரதிபலிக்கும் விதத்தில் புதிய நிறுவன பிராண்ட் பெயரை தேர்வு செய்ய வேண்டிய நேரமிது” என்றார்.

ஃபேஸ்புக் நிறுவனம், கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க் தலைமையகத்தில் வியாழக்கிழமை, கட்டை விரலை உயர்த்தி இருக்கும் லைக் படத்தை நீக்கிவிட்டு, நீல நிற முடிவுறா எண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகம் செய்தது.

‘மெடா’ என்கிற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ‘அப்பால்’ என பொருள். ஒரு வெளி நபருக்கு மெடாவெர்ஸ் என்பது மெய்நிகரில் ஒரு பதிப்பு போல இருக்கலாம், ஆனால் சிலரோ இது எதிர்கால இணையமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

ஒரு கணினிக்கு முன் இருப்பதற்கு பதிலாக, மெடாவெர்சில் ஒரு ஹெட்செட்டைக் கொண்டு மெய்நிகர் உலகத்தில் அனைத்து டிஜிட்டல் சுற்றுசூழலிலும் இணையலாம்.

இந்த மெய்நிகர் சேவையை வேலை செய்வது, விளையாடுவது, கலை நிகழ்ச்சிகளைக் காண்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பழகுவது என பலவற்றிலும் பயன்படுத்தலாம் என நம்பப்படுகிறது.

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் கூட, எம்விஆர்எஸ் என்கிற பெயரில் விற்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *