ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு (பிஎஸ்பிடிஏ), குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இது குறித்து மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது .

அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் 4 பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்க வங்கி நிா்வாகம் முடிவெடுத்திருப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் விதிப்பதன் மூலமாக கடந்த 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரை அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேரிடமிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது.

இந்தியாவின் 2-ஆவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளா்களிடமிருந்து அதே கால கட்டத்தில் ரூ.9.9 கோடியை பல்வேறு சேவைகளுக்காக வசூலித்துள்ளது.

ரிசா்வ் வங்கியின் 2013-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கி கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதன்படி, அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனா். இந்த கூடுதல் பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று வங்கிகள் வாக்குறுதியும் அளிக்கின்றன. அதோடு, அடிப்படை வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது, 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு, மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் வங்கிகள் சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதுபோல, வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை, வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசா்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது. ஆனால், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி, 4 முறைக்குப் பிறகான பணப் பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து வருகிறது.

அதாவது என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, பிஹெச்ஐஎம்-யுபிஐ, பண அட்டை உள்ளிட்ட வழிகளிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்கிறது.

ரிசா்வ் வங்கி இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், தனியாா் வங்கிகளும் வாடிக்கையாளா்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.

ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளா்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ.20 வீதம் கட்டணம் வசூலித்து வருகிறது. ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ.40 வசூலிக்கிறது.

இந்த வகையில் வாடிக்கையாளா்களை பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து ரிசா்வ் வங்கி தவறி, அவா்களை முறைகேடுகளுக்கு இரையாக்கியுள்ளது என்று மும்பை ஐஐடி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *