டிரம்பின் கொள்கையை மாற்றிய ஜோ பிடன்..! உலக சுகாதார அமைப்புடன் இணைந்தது மகிழ்ச்சி: ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

டிரம்பின் கொள்கையை மாற்றிய ஜோ பிடன்..! உலக சுகாதார அமைப்புடன் இணைந்தது மகிழ்ச்சி: ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு

நியூயார்க்: டிரம்பின் கொள்கையின்படி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், தற்போதைய அதிபர் பிடன் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனை ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றனர். பிடன் பதவியேற்ற முதல் நாளிலேயே முக்கியமான 15 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக முன்னாள் அதிபர் டிரம்பின் கொள்கைகளை மாற்றியமைக்கும் வண்ணம் இருந்த அனைத்து கோப்புகளிலும் பிடன் கையெழுத்திட்டார்.

அதில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்து முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களை தடுப்பதற்காக 2015ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி 196 உலக நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. முன்னாள் அதிபர் டிரம்ப் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அதில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்பது குறித்த கோப்பில் பிடன் கையெழுத்திட்டுள்ள்ளார். டிரம்ப் அதிபராக இருந்தபோது நீண்ட நாள்களாக கொரோனா தடுப்புக்காக மாஸ்க் அணியாமல் அடம்பிடித்து வந்தார். உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியும் மாஸ்க் அணிய மறுத்தார். கொரோனாவை அலட்சியமாகவே கையாண்டார். பின்னர், சீனாவையும், உலக சுகாதார அமைப்பையும் கண்டித்த டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

ஆனால், பிடன் பதவியேற்ற பின் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் சேரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதனால், உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இருந்த பிணக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டாரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுடன் மீண்டும் இணைவதை வரவேற்கிறேன். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தடுக்க அமெரிக்காவின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா சேர்ந்து உள்ளதால், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இது உலகளாவிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும்’ என்றார்….

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *