மக்கள்திலகம் எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மட்டுமே✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

மக்கள்திலகம் கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மட்டுமே.

அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார்.

ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர்.

அவர்களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார்.

சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட்டது.

இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர்.

சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார். இதன் தொடர்ச்சியாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர்,

‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.

‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,

‘‘உங்களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’

-என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *