ஆட்சியாளர்களை அலறவிடும் விவசாயிகள் போராட்டம்!
நேற்று இரவிலிருந்தே டெல்லி அரசும், ஹரியானா, பஞ்சாப் போலீசும் தூக்கத்தை இழந்துவிட்டது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும் அதிகாலையிலேயே தங்களது ‘டெல்லி சலோ’ பயணத்தை துவங்கிவிட்டனர்.
சாலைகளில் வழக்கமான போலீசின் தடுப்புகளை தூக்கி வீசியெறிந்துவிட்டு முன்னேறிய விவசாயிகளை தண்ணீரைப் பீச்சியடித்து விரட்டியது போலீசு! சிதறி ஓடிவிடுவார்கள் என்று எதிர்பார்த்த போலீசின் கணிப்புக்கு மாறாக, விவசாயிகள் கூடி கைகோர்த்து நின்று எதிர்கொண்டனர். தண்ணீர் வேகம் குறையும்போது வேகமாக சாலையை ஓடி கடக்கிறார்கள்.
போலீசின் அடுத்த ஆயுதம் கண்ணீர் புகைக் குண்டு! அதையும் போராடி எதிர்கொண்டு முன்னேறிக்கொண்டே செல்கிறது விவசாயிகள் படை!
மெட்ரோ ரயில் சேவையையும், பொதுப் போக்குவரத்தையும் ரத்துசெய்து விட்டது டெல்லி! எல்லையில் போலீசு, துணைராணுவப் படையும் விவசாயிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! விவசாயிகளின் டிராக்டர்களை தடுக்க மணல் ஏற்றிய கனரக வாகனங்களை தடுப்பு அரணாக பயன்படுத்த தயார்நிலையில் வைத்துள்ளது அரசு!
எல்லாவற்றையும் எதிர்பார்த்துதான் விவசாயிகளும் தயார் நிலையில் உள்ளனர். கடந்த சில வாரங்களாக தங்களது ரேஷன் பொருள்களை சேமித்து வைத்துள்ளனர். இத்துடன் விறகுகள், சமையல் கேஸ் சிலிண்டர், குளிரை சமாளிக்க வைக்கோல் இருக்கைகள், தண்ணீர் டேங்குகள் என சகல தயாரிப்புடன்தான் பயணத்தை தொடர்கிறார்கள்.
ஒன்றுபட்ட விவசாயிகளின் சக்திக்கு முன் அரசின் அடக்குமுறைகள் தூசு என்பதை போராட்டம் நிரூபித்து வருகிறது!