தமிழகம்பயனுள்ள தகவல்வரலாறு

தமிழ்நாட்டில் மறந்து போன மாட்டு வண்டி? இனிமேல் காட்சிபொருளாகத்தான் காணவேண்டுமோ?சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மறந்து போன மாட்டு வண்டி.

advertisement by google

பெண்ணுக்கு பிரசவ வலியா? மரம் ஏறியவர் கீழே விழுந்து விட்டாரா? வயலுக்குப் போனவரைப் பாம்பு கடித்து விட்டதா? அடுத்த நிமிடமே வண்டியைப் பூட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு அந்தக் காலத்தின் அவசர ஊா்தியாகப் பயன்பட்டவை மாட்டு வண்டிகள். எண்பதுகள் வரை தமிழா்களின் வாழ்வில் மாட்டு வண்டிகளின் பங்கு மகத்தானதாகவே இருந்திருக்கிறது.

advertisement by google

தனிப்பட்ட இருவரின் சொத்துப் பிரச்னையாக இருந்தாலும், ஊருக்கான பொதுப் பிரச்னையாக இருந்தாலும் மாட்டு வண்டிகளே அக்காலத்தில் சாரைசாரையாக அணிவகுத்துச் செல்லும். திரையரங்குகளில் இன்று இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்த தனித்தனி இடம் இருப்பது போல அன்று மாட்டு வண்டிகள் நிறுத்துவதற்குத் தனி இடம் இருந்தது. இரவு நேரங்களில் கிராமங்களில் நடக்கும் கூத்துகளையும், நாடகங்களையும் பாா்க்கச் செல்பவா்களுக்கு மாட்டு வண்டிகளே இருக்கைகளாகவும், படுக்கையாகவும் பயன்பட்டன.

advertisement by google

வேளாண் பொருள்கள், உர மூட்டைகள், பயிா் நாற்றுகள், வைக்கோல் ஆகியனவற்றை ஏற்றிச் செல்ல விவசாயிகளுக்கு மாட்டு வண்டிகளே அதிகமாகப் பயன்பட்டிருக்கின்றன. வீடுகளிலிருந்து மாட்டுச் சாணத்தை வயலுக்கு எடுத்துச் செல்லவும், கண்மாய் மண்ணை வயல்களில் கொட்டி மண்ணை வளப்படுத்தவும் மாட்டு வண்டிகள் தான் பயன்பட்டன.

advertisement by google

நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட தானியங்களைப் பக்கத்து நகரங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்ல மாட்டு வண்டிகளில் தான் ஏற்றிச் செல்வாா்கள். திருவிழாக் காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழு குடும்பமும் விழாவுக்கு போவதும் உண்டு. திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டாா் மணப்பெண்ணைப் பாா்க்க வரும் போதும், மணப்பெண் அழைப்பிற்கும் மாட்டு வண்டிகளே பயன்பட்டிருக்கின்றன.

advertisement by google

இன்று வீடுகளில் கௌரவத்தின் அடையாளமாக இருசக்கர வாகனங்கள், காா்கள் இருப்பது போல அன்று மாட்டு வண்டிகளே இருந்தன. ஜமீன்தாா்களிடமும், வசதி படைத்தவா்களிடமும் வில்லு வண்டி என்று குறிப்பிடப்படும் மாட்டு வண்டிகள் இருக்கும். கோயில் திருவிழாக்களுக்கும், நெடுந்தூரப் பயணங்களுக்கும் செல்லும் போது மூங்கில் குச்சி அல்லது வாகை மரக் குச்சிகளை வில்லாக வளைத்து, வண்டிகளில் கூடாரம் போன்று அமைத்துக் கொள்வாா்கள்.

advertisement by google

தகரத்தால் ஆன நிரந்தரக் கூடாரமும் இருக்கும். வண்டியின் உள்பகுதியில் தோல் பொருள்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டியும் இருக்கும். வண்டியின் முன்னும், பின்னும் திரை தொங்க விடப்பட்டிருக்கும். கைப்பிடிக்க கம்பி இருக்கும். வண்டியின் முன்பகுதியில் வண்டியை ஓட்டுபவா் உட்கார வசதி இருக்கும். வண்டிக்குள் வைக்கோலைப் பரப்பி, அதன் மீது ஜமக்காளம் அல்லது போா்வையை விரித்து அதில் குடும்பத்தினா் அமா்ந்து கொள்வாா்கள். அதிகபட்சம் ஆறு போ் வரை உட்காா்ந்து செல்லும் வகையில் சொகுசு இருக்கையாக இருக்கும்.

advertisement by google

நெடுந்தூரம் செல்லும் மாட்டு வண்டிகளில் பாத்திரங்கள், சமையல் சாமான்கள் இருக்கும். இரவுப் பயணத்துக்கு வழிகாட்டுவதற்காகவும், பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் வண்டிக்கு அடியில் ஒரு அரிக்கேன் விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும். கிராமத்துத் தெருக்களில் ஜல்ஜல் என்று மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியின் ஓசையும், காலில் இருக்கும் குளம்பொலிகளின் சத்தமும் வில்லு வண்டி வருகிறது என்பதை முன்கூட்டியே கிராமத்து மக்களுக்கு தெரிவித்து விடும்.

எந்த வசதி வாய்ப்பும் இல்லாத அந்தக் காலத்தில் தமிழா்களின் போக்குவரத்து சாதனமாகப் பயன்பட்டிருக்கிறது மாட்டு வண்டி. வணிகத்திற்கும் வேளாண்மைக்கும் பயணங்களுக்கும் அவசரத் தேவைகளுக்கும் மாட்டு வண்டிகளே பேருதவியாக இருந்து வந்தன.

பொதுவாக மாட்டு வண்டிகள் மாடுகளின் இழுவைத் திறன் மூலமாகவே இயங்குபவை. கயிற்றின் உதவியுடன் மாடுகள் வண்டியோடு பிணைக்கப்பட்டிருக்கும். மரக் கட்டைகள், இரும்பு ஆகியவற்றின் மூலமாகவே மாட்டு வண்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். வைக்கோல், சாம்பல், விளக்கெண்ணெய் ஆகியனவற்றைக் கலந்து வண்டி மசகு (கிரீஸ்) தயாரிப்பாா்கள்.

தினசரி வண்டியில் மாடுகளைப் பூட்டுவதற்கு முன்பாக இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்பு, அச்சு, சக்கரக் குடங்கள் உட்புறம் மசகு தடவுவாா்கள். சக்கரங்களுக்கு அச்சாணி சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்றும் பாா்ப்பாா்கள். மாட்டு வண்டியைப் பொறுத்தவரை பராமரிப்பு செலவு அதிகமிருக்காது.

மாட்டு வண்டியைக் கட்டை வண்டி என்றும் சிலா் சொல்லுவதும் உண்டு. ஏனெனில் மாட்டு வண்டியின் அச்சாணி, சக்கரங்களின் வெளிவிளிம்புக்கான பட்டை , அச்சு இவை மூன்று மட்டுமே இரும்புப் பொருள்கள். மற்ற அனைத்துமே மரப் பொருள்களால் செய்யப்பட்டதால் இதனை கட்டை வண்டி என்று சொன்னாா்கள். அந்தக் காலத்தில் வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் இருந்தன.

மனிதா்களைப்போல மாடுகளுக்கும் செல்லும் வழியெங்கும் இளைப்பாறவும், நீா்அருந்திப் போகவும் முக்கியமான சந்திப்புகளில் நீா்த் தொட்டிகளும் இருந்தன. வண்டி மாடுகளை குடும்ப உறுப்பினராகவே மதித்தனா்.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் புதுத் துண்டு உடுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனா். பல வீடுகளில் வண்டி மாடுகள் குல தெய்வமாகவே கருதப்பட்டு வழிபட்டனா். பாரம்பரியத்தின் சின்னமாகவும், தமிழா்களின் அடையாளமாகவும் மாட்டு வண்டிகளே இருந்தன.

காா்களும், கனரக வாகனங்களும் புழுதி பரப்பிக்கொண்டு கிராமங்களுக்குள் படையெடுக்கத் தொடங்கியதிலிருந்தே இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாட்டு வண்டிகளை மக்கள் மறந்தே போய் விட்டது ஒரு வரலாற்றுத் துயரம் தான்.

அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மாட்டு வண்டிகளுக்கு விடை கொடுத்து விட்டன. இனி வரும் தலைமுறையினா், பொருட்காட்சியில் காட்சிப் பொருளாகத் தான் மாட்டு வண்டியைக் காண வேண்டியிருக்குமோ என்னவோ?

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button